Haggai 2:4-9 or Joel 3:1-5
Haggai 2:4-9
2:4 ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,’ என்கிறார் ஆண்டவர். ‛தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
2:5 “நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கின்றது; அஞ்சாதீர்கள்.
2:6 ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‛இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலைநிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.
2:7 வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2:8 ‛வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2:9 ‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‛இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.”
Joel 3:1-5
3:1 “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;
3:2 அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
3:3 என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.
3:4 தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.
3:5 நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.