உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பின்வரும் ஆறாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

ஆகாய் 2:4-9 அல்லது யோவேல் 3:1-5

ஆகாய் 2:4-9

2:4 ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,’ என்கிறார் ஆண்டவர். ‛தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”

2:5 “நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கின்றது; அஞ்சாதீர்கள்.

2:6 ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‛இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலைநிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.

2:7 வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.

2:8 ‛வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.

2:9 ‛இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்’, என்கிறார் படைகளின் ஆண்டவர். ‛இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’, என்கிறார் படைகளின் ஆண்டவர்.”

யோவேல் 3:1-5

3:1 “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;

3:2 அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;

3:3 என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.

3:4 தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.

3:5 நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.

திருமுகம்

பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 4:7-11 அல்லது திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:12-14

பேதுரு எழுதிய முதல் திருமுகம் (1 பேதுரு) 4:7-11

4:7 எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

4:8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்.

4:9 முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.

4:10 நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே, உங்களுள் ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

4:11 ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு, இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:12-14

1:12 பின்பு, அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது.

1:13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.

1:14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 15:26-27 அல்லது யோவான் நற்செய்தி (யோவான்) 16:1-4

யோவான் நற்செய்தி (யோவான்) 15:26-27

15:26 தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

15:27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.

யோவான் நற்செய்தி (யோவான்) 16:1-4

16:1 “நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

16:2 உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.

16:3 தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்.

16:4 இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.”⒯“தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை; ஏனெனில், நான் உங்களோடு இருந்தேன்.