Easter

6th Sunday after Easter

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Joel 3:1-5

3:1 “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;

3:2 அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;

3:3 என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.

3:4 தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.

3:5 நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.

Epistle

Romans 8:31-39 or Acts 1:12-14

Romans 8:31-39

8:31 இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?

8:32 தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?

8:33 கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.

8:34 அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டு கடவுளின் வலப் பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

8:35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?

8:36 “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

8:37 ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

8:38 ஏனெனில், சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ,

8:39 உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

Acts 1:12-14

1:12 பின்பு, அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது.

1:13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.

1:14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

Gospel

John 17:20-26

17:20 “அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.

17:21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

17:22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

17:23 இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.

17:24 “தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

17:25 நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.

17:26 நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”