Exodus 20:1-17
20:1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
20:2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
20:3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
20:4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
20:5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
20:6 மாறாக, என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.
20:7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.
20:8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
20:9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.
20:10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
20:11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.
20:12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.
20:13 கொலை செய்யாதே.
20:14 விபசாரம் செய்யாதே.
20:15 களவு செய்யாதே.
20:16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
20:17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.