Trinitatis

6. søndag efter Trinitatis

Tekstrække 2

Bibeloversættelse

Den hellige Bibel på tamil

📜
Det Gamle Testamente

Anden Mosebog 20,1-17

20:1 தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:

20:2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;

20:5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.

20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

20:8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;

20:9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

20:10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

20:11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

20:13 கொலை செய்யாதிருப்பாயாக.

20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.

20:15 களவு செய்யாதிருப்பாயாக.

20:16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

Epistel

Paulus' Brev til Romerne 3,23-28

3:23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

3:25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,

3:26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

3:27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.

3:28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

Evangelium

Matthæusevangeliet 19,16-26

19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.

19:17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

19:18 அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;

19:19 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.

19:20 அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.

19:21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.

19:22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

19:23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

19:25 அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

19:26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.