Trinity

7th Sunday after Trinity

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Ecclesiastes 3:1-11

3:1 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச் சிக்கும் ஒரு காலமுண்டு.

3:2 பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்;

3:3 கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;

3:4 இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;

3:5 கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்;

3:6 தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்;

3:7 கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்;

3:8 அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

3:9 வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?

3:10 மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன்.

3:11 கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

Epistle

Romans 8:1-4

8:1 ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.

8:2 ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது.

8:3 ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார். அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார்.

8:4 ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.

Gospel

Matthew 10:24-31

10:24 சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரைவிடப் பெரியவர் அல்ல.

10:25 சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?

10:26 “எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில், வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

10:27 நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

10:28 ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

10:29 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

10:30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

10:31 சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள்.