Jeremiah 23:16-24
23:16 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.
23:17 ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள்.
23:18 ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்? அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்? அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்?
23:19 இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது; அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.
23:20 ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது; வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.
23:21 அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை; அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.
23:22 ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால் என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்கள் தங்கள் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர்.
23:23 ஆண்டவர் கூறுவது; அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா?
23:24 என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.