திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் எட்டாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எரேமியா 23:16-24

23:16 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.

23:17 ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள்.

23:18 ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்? அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்? அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்?

23:19 இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது; அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.

23:20 ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது; வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.

23:21 அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை; அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.

23:22 ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால் என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்கள் தங்கள் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர்.

23:23 ஆண்டவர் கூறுவது; அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா?

23:24 என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.

திருமுகம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 8:14-17

8:14 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

8:15 மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.

8:16 நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.

8:17 நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 7:15-21

7:15 போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.

7:16 அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?

7:17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.

7:18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

7:19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.

7:20 இவ்வாறு, போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

7:21 என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.