திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் எட்டாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

மீக்கா (மீகா) 3:5-7

3:5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ‘அமைதி உண்டாகுக!’ என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் ‘புனிதப் போர் வரும்’ எனக் கூறுகின்றார்கள்.”

3:6 ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.”

3:7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.

திருமுகம்

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 4:1-6

4:1 அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.

4:2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது. இவ்வாறு கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்.

4:3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும் தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்! இதோ! இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.

4:4 பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்றுவிட்டீர்கள்; உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவை விடப் பெரியவர்.

4:5 அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான், உலகு சார்ந்தவற்றையே பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.

4:6 ஆனால், நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச் செவிசாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவி சாய்ப்பதில்லை. இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 7:22-29

7:22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர்.

7:23 அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

7:24 “ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

7:25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில், பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

7:26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.

7:27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

7:28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

7:29 ஏனெனில், அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்