திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

நீதிமொழிகள் 3:27-35

3:27 உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.

3:28 அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.

3:29 அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?

3:30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.

3:31 வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.

3:32 ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.

3:33 பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.

3:34 செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;

3:35 ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.

திருமுகம்

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 1:5-10 அல்லது யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:1-2

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 1:5-10

1:5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.

1:6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.

1:7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.

1:8 ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது.

1:9 மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்.

1:10 நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:1-2

2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து.

2:2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 16:1-9

16:1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.

16:2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார்.

16:3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.

16:4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.

16:5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார்.

16:6 அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார்.

16:7 பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார்.

16:8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.

16:9 “ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.