திரித்துவ காலம்

மூவொரு கடவுள் பெருவிழாவுக்குப் பின்வரும் ஒன்பதாம் ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 10:1-3

10:1 அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!

10:2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்; எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்; கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகிறார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.

10:3 தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?

திருமுகம்

திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 தீமோத்தேயு) 1:6-11

1:6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.

1:7 கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

1:8 எனவே, நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

1:9 அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.

1:10 நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

1:11 அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 12:32-48 அல்லது லூக்கா நற்செய்தி (லூக்கா) 18:1-8

லூக்கா நற்செய்தி (லூக்கா) 12:32-48

12:32 “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

12:33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.

12:34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

12:35 “உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.

12:36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

12:37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

12:38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

12:39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

12:40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”

12:41 அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.

12:42 அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?

12:43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.

12:44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

12:45 ஆனால், அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்

12:46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

12:47 தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.

12:48 ஆனால், அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

லூக்கா நற்செய்தி (லூக்கா) 18:1-8

18:1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.

18:2 “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

18:3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

18:4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

18:5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

18:6 பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,

18:7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?

18:8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.