Trinity

All Saints' Day

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 60:18-22

60:18 உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை ‘விடுதலை’ என்றும் உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும் அழைப்பாய்.

60:19 கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!

60:20 உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.

60:21 உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே.

60:22 அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.

Epistle

Revelation 7:1-17

7:1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.

7:2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து,

7:3 “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.

7:4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.

7:5 யூதா குலத்தில் முத்திரையிடப் பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

7:6 ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

7:7 சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,

7:8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.

7:9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

7:10 அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

7:11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

7:12 “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.

7:13 மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார்.

7:14 நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.

7:15 இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.

7:16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.

7:17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”

Gospel

Matthew 5:1-12

5:1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

5:2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

5:3 “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது.

5:4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5:5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

5:6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.

5:7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

5:8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

5:9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

5:10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.

5:11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

5:12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.