Trinity

All Saints' Day

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 49:8-11

49:8 ஆண்டவர் கூறுவது இதுவே: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.

49:9 சிறைப்பட்டோரிடம், ‘புறப்படுங்கள்’ என்றும் இருளில் இருப்போரிடம் ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.

49:10 அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில், அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.

49:11 என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

Epistle

Revelation 21:1-7

21:1 பின்பு, நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.

21:2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

21:3 பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.

21:4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது.

21:5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

21:6 பின்னர், அவர் என்னிடம் கூறியது: “எல்லாம் நிறைவேறிவிட்டது; அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன்.

21:7 வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.

Gospel

Matthew 5:13-16 or Matthew 5:1-12

Matthew 5:13-16

5:13 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

5:14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.

5:15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.

5:16 இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

Matthew 5:1-12

5:1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.

5:2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

5:3 “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது.

5:4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5:5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

5:6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.

5:7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

5:8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

5:9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

5:10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.

5:11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

5:12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.