Lent

Annunciation

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 7:10-14 or Genesis 18:1-15

Isaiah 7:10-14

7:10 ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:

7:11 “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.

7:12 அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.

7:13 அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

7:14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.

Genesis 18:1-15

18:1 பின்பு, ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,

18:2 கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி,

18:3 “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

18:4 இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.

18:5 கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில், உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

18:6 அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார்.

18:7 ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான்.

18:8 பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.

18:9 பின்பு, அவர்கள் அவரை நோக்கி, “உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார்.

18:10 அப்பொழுது ஆண்டவர்; “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

18:11 ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.

18:12 எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” என்றாள்.

18:13 அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!

18:14 இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்று சொன்னார்.

18:15 சாராவோ, “நான் சிரிக்கவில்லை” என்று சொல்லி மறுத்தார். ஏனெனில், அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.

Epistle

1 Corinthians 1:21-31

1:21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால், உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே, மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

1:22 யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.

1:23 ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.

1:24 ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

1:25 ஏனெனில், மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?

1:27 ஆனால், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.

1:28 உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.

1:29 எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

1:30 அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்.

1:31 எனவே, மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

Gospel

Luke 1:46-55

1:46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்:

1:47 “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

1:48 ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

1:49 ஏனெனில், வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

1:50-53 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

1:54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்”.