உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழா

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 110:1-4

110:1 ஆண்டவர் என் தலைவரிடம், ‛நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார்.

110:2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

110:3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

110:4 ‛மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 1:1-11

1:1-2 தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.

1:3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.

1:4 அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்.

1:5 யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்” என்று கூறினார்.

1:6 பின்பு, அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள்.

1:7 அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல;

1:8 ஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

1:9 இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.

1:10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,

1:11 “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

நற்செய்தி

மாற்கு நற்செய்தி (மாற்கு) 16:14-20

16:14 இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.

16:15 இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

16:16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

16:17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;

16:18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

16:19 இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

16:20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.]