கிறிஸ்து பிறப்புக் காலம்

கிறிஸ்து பிறந்த இனிய இரவின் பெருவிழா

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 9:1-6

9:1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.

9:2 காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.

9:3 ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

9:4 மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

9:5 அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.

9:6 ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:1-14 அல்லது மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 1:18-25

லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:1-14

2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.

2:2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.

2:3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.

2:4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,

2:5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

2:6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.

2:7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

2:8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

2:9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

2:10 வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

2:11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.

2:12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.

2:13-14 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 1:18-25

1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.

1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

1:20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

1:21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

1:22-23 ⦃“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.

1:24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

1:25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.