உயிர்ப்புக் காலம்

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவின் இரண்டாம் நாள்

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 22:22-32

22:22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

22:23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.

22:24 ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; § தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

22:25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

22:26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

22:27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

22:28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.

22:29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.

22:30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

22:31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‛இதை அவரே செய்தார்’ என்பர்.

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 10:34-41

10:34 அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்.

10:35 எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.

10:36 இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர்.

10:37 திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.

10:38 கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

10:39 யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.

10:40 ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்.

10:41 ஆயினும், அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 24:13-35

24:13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.

24:14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.

24:15 இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.

24:16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

24:17 அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.

24:18 அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!” என்றார்.

24:19 அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.

24:20-21 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால், தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.

24:22 ஆனால், இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;

24:23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.

24:24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால், அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.

24:25 இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!

24:26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!” என்றார்.

24:27 மேலும், மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

24:28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.

24:29 அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.

24:30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.

24:31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

24:32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக் கொண்டார்கள்.

24:33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

24:34 அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள்.

24:35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.