திருக்காட்சிக் காலம்

கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழா

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 60:1-6

60:1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!

60:2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

60:3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

60:4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.

60:5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.

60:6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

திருமுகம்

தீத்துக்கு எழுதிய திருமுகம் (தீத்து) 3:4-7

3:4 நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,

3:5 நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

3:6 அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.

3:7 நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 2:1-12

2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2:2 “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

2:3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.

2:4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

2:5-6 அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

2:7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

2:8 மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

2:9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

2:10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

2:11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

2:12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.