Epiphany

Epiphany

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Isaiah 60:1-6 or Job 28:12-28

Isaiah 60:1-6

60:1 எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!

60:2 இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

60:3 பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

60:4 உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.

60:5 அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.

60:6 ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

Job 28:12-28

28:12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

28:13 மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

28:14 ‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்; ‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.

28:15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.

28:16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

28:17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

28:18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

28:19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

28:20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

28:21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.

28:22 படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;

28:23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

28:24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

28:25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,

28:26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

28:27 அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

28:28 அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.

Epistle

1 John 2:7-11

2:7 அன்பிற்குரியவர்களே! நான் உங்களுக்கு எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல; நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த பழைய கட்டளை தான் அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை.

2:8 இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது புதியது என்பது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில், இருள் அகன்று போகிறது; உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.

2:9 ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.

2:10 தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.

2:11 தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது.

Gospel

Matthew 2:1-12 or John 8:12-20

Matthew 2:1-12

2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,

2:2 “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

2:3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.

2:4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

2:5-6 அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

2:7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.

2:8 மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

2:9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

2:10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

2:11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

2:12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

John 8:12-20

8:12 மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.

8:13 பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர்.

8:14 அதற்கு இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது.

8:15 நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை.

8:16 ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

8:17 இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா?

8:18 என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்றார்.

8:19 அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்” என்றார்.

8:20 கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.