திருக்காட்சிக் காலம்

கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழா

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

பரிசுத்த வேதாகமம் — தமிழ் பழைய பதிப்பு வேதாகமம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 60:1-6 அல்லது யோபு 28:12-28

எசாயா (ஏசாயா) 60:1-6

60:1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

60:2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

60:3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

60:4 சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க் கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

60:5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.

60:6 ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

யோபு 28:12-28

28:12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?

28:13 அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.

28:14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.

28:15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.

28:16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

28:17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.

28:18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

28:19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.

28:20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?

28:21 அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.

28:22 நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.

28:23 தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.

28:24 அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.

28:25 அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,

28:26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.

28:27 அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,

28:28 மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

திருமுகம்

யோவான் எழுதிய முதல் திருமுகம் (1 யோவான்) 2:7-11

2:7 சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

2:8 மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

2:9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

2:10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

2:11 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 2:1-12 அல்லது யோவான் நற்செய்தி (யோவான்) 8:12-20

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 2:1-12

2:1 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

2:2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

2:3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

2:4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

2:5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:

2:6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

2:7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து:

2:8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லெகேமுக்கு அனுப்பினான்.

2:9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.

2:10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.

2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

2:12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

யோவான் நற்செய்தி (யோவான்) 8:12-20

8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

8:13 அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.

8:14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.

8:15 நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;

8:16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.

8:17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.

8:18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்.

8:19 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.

8:20 தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.