Faste

Langfredag

Tekstrække 2

Bibeloversættelse

Den hellige Bibel på tamil

📜
Det Gamle Testamente

Salmernes Bog 22,2-22 eller Esajas' Bog 52,13-15 eller Esajas' Bog 53

Salmernes Bog 22,2-22

22:2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

22:3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

22:4 எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

22:5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.

22:6 நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

22:7 என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:

22:8 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.

22:9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.

22:10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.

22:11 என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.

22:12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.

22:13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.

22:14 தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

22:15 என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

22:16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

22:17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

22:18 என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

22:19 ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

22:20 என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

22:21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.

22:22 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

Esajas' Bog 52,13-15

52:13 இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

52:14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

52:15 அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Esajas' Bog 53

53:1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

53:2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

53:3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

53:6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

53:7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

53:8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

53:9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.

53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

53:11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

Evangelium

Lukasevangeliet 23,26-49 eller Johannesevangeliet 19,17-37

Lukasevangeliet 23,26-49

23:26 அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

23:27 திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

23:28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

23:29 இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

23:30 அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

23:31 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

23:32 குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

23:33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

23:34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

23:35 ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

23:36 போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

23:37 நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

23:38 இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.

23:39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

23:40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

23:41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,

23:42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

23:44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

23:45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

23:47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

23:48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

23:49 அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Johannesevangeliet 19,17-37

19:17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

19:18 அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

19:19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

19:20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

19:21 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

19:22 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.

19:23 போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

19:24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

19:27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

19:28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

19:29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

19:31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.

19:32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.

19:33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.

19:34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

19:35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

19:36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.

19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.