Exodus 34:27-35
34:27 ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார்.
34:28 அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை; தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.
34:29 மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால், மோசே அதை அறியவில்லை.
34:30 ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.
34:31 ஆனால், மோசே அவர்களைக் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.
34:32 பின்னர், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.
34:33 மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக்கொண்டார்.
34:34 மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.
34:35 இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும். மோசே ஆண்டவரோடு பேசச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.