திருக்காட்சிக் காலம்

கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவிற்குப் பின்வரும் கடைசி ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 2:2-5

2:2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

2:3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

2:4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.

2:5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;

திருமுகம்

கொலோசையருக்கு எழுதிய திருமுகம் (கொலோசெயர்) 1:25-28

1:25 என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே, நான் திருத்தொண்டன் ஆனேன்.

1:26 நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

1:27 மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார்.

1:28 கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 12:23-33

12:23 இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

12:24 கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

12:25 தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

12:26 எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.

12:27 மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்.

12:28 தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார். அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது.

12:29 அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.

12:30 இயேசு அவர்களைப் பார்த்து, “இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது.

12:31 இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்.

12:32 நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும் போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.

12:33 தாம் எவ்வாறு இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.