Trinity

Last Sunday of the Church Year

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Micah 4:1-3

4:1 “இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை; மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.

4:2 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, ‘புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்; எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.

4:3 அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்; தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.

Epistle

1 Corinthians 3:10-17

3:10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.

3:11 ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

3:12 அந்த அடித்தளத்தின்மேல் ஒருவர் பொன், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள், மரம், புல், வைக்கோல் ஆகியவற்றுள் எதையும் வைத்துக் கட்டலாம்.

3:13 ஆனால், அவரவருடைய வேலைப்பாடு தெரிந்துவிடும்; தீர்ப்பு நாள் அதைத் தெளிவுப்படுத்தும். அந்நாள் நெருப்பு மயமாய் வெளிப்படும். அந்நெருப்பு அவரவருடைய வேலை எத்தகையது என்பதைக் காட்டும்.

3:14 ஒருவர் கட்டியது நிலைத்து நின்றால் அதற்கான கூலியை அவர் பெறுவார்.

3:15 ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால், நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.

3:16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?

3:17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

Gospel

Matthew 11:25-30

11:25 அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

11:26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

11:27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

11:28 மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

11:29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

11:30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்