Lent

Maundy Thursday

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Exodus 12:1-11

12:1 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:

12:2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!

12:3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

12:4 ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

12:5 ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.

12:6 இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.

12:7 இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.

12:8 இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

12:9 அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.

12:10 அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.

12:11 நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’.

Epistle

1 Corinthians 10:15-17

10:15 உங்களை அறிவாளிகள் என மதித்துப் பேசுகிறேன். நான் சொல்வதைக் குறித்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

10:16 கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா!

10:17 அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

Gospel

Matthew 26:17-30

26:17 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

26:18 இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார்.

26:19 இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

26:20 மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.

26:21 அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

26:22 அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

26:23 அதற்கு அவர், “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.

26:24 மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்” என்றார்.

26:25 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.

26:26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார்.

26:27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;

26:28 ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

26:29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

26:30 அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.