Faste

Skærtorsdag

Tekstrække 2

Bibeloversættelse

Den hellige Bibel på tamil

📜
Det Gamle Testamente

Salmernes Bog 116

116:1 கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

116:2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

116:3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

116:4 அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.

116:5 கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.

116:6 கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்.

116:7 என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

116:8 என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

116:9 நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

116:10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.

116:11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

116:12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

116:13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

116:14 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

116:15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

116:16 கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

116:17 நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

116:18 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

116:19 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

Epistel

Paulus' Første Brev til Korintherne 11,23-26

11:23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

11:24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

11:26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

Evangelium

Johannesevangeliet 13,1-15

13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

13:2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்;

13:3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;

13:4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,

13:5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

13:6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.

13:7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

13:8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

13:9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்.

13:10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.

13:11 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

13:12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

13:13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

13:15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.