Christmas

New Year's Day

Text cycle 2

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 90

90:1 என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.

90:2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!

90:3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.

90:4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

90:5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;

90:6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.

90:7 உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.

90:8 எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.

90:9 எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன; எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.

90:10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.

90:11 உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்?

90:12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

90:13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

90:14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

90:15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.

90:16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

90:17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!

Epistle

James 4:13-17

4:13 “இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே சற்றுக் கேளுங்கள்.

4:14 நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்.

4:15 ஆகவே, அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை.

4:16 இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது.

4:17 நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

Gospel

Matthew 6:5-13

6:5 “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

6:6 ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

6:7 மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

6:8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

6:9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!

6:10 உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!

6:11 இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.

6:12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்.

6:13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். [‘ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.’]