21:1
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,
21:2
“நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.
21:3
யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார்.
21:4-5
“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.
21:6
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.
21:7
அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.
21:8
பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
21:9
அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.