12:1
பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார்.
12:2
அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார்.
12:3
மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.
12:4
இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,
12:5
“இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.
12:6
ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.
12:7
அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
12:8
ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார்.
12:9
இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள்.
12:10
ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள்.
12:11
ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
12:12
மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,
12:13
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
12:14-15
இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். “மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்” என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
12:16
அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப் புரிந்து கொள்ளவில்லை. அவரைப்பற்றி மறைநூலில் எழுதப்பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.