Pre-Lent

Quinquagesima (Shrovetide)

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Psalm 2

2:1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?

2:2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்;

2:3 ‛அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ § என்கின்றார்கள்.

2:4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.

2:5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;

2:6 ‛என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.’

2:7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‛நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

2:8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.

2:9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.’

2:10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

2:11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!

2:12 அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்; இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

Epistle

1 Peter 3:18-22

3:18 கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

3:19 அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார்.

3:20 நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர்.

3:21 அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது.

3:22 அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.

Gospel

Matthew 3:13-17

3:13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

3:14 யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார்.

3:15 இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.

3:16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.

3:17 அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.