18:31
இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்; மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.
18:32
அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.
18:33
அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக்கொலை செய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்” என்றார்.
18:34
இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
18:35
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
18:36
மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார்.
18:37
நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
18:38
உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.
18:39
முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
18:40
இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,
18:41
“நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
18:42
இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.
18:43
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.