தவக்காலத்திற்கு முன் வரும் காலம்

ஐம்பதாம் நாளென்கின்ற ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் (சங்கீதம்) 31:2-6

31:2 உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு கோட்டையாய் இரும்.

31:3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.

31:4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.

31:5 உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

31:6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

திருமுகம்

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 13

13:1 நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

13:2 இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், § அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

13:3 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

13:4 அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.

13:5 அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

13:6 அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும்.

13:7 அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

13:8 இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.

13:9 ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.

13:10 நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.

13:11 நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

13:12 ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

13:13 ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 18:31-43

18:31 இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம், “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்; மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.

18:32 அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.

18:33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக்கொலை செய்வார்கள். ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்” என்றார்.

18:34 இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

18:35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

18:36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார்.

18:37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

18:38 உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார்.

18:39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

18:40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும்,

18:41 “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.

18:42 இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.

18:43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.