Pre-Lent

Septuagesima

Text cycle 1

Bible Translation

Ecumenical Bible — Tamil Catholic Ecumenical Bible

📜
Old Testament

Jeremiah 9:22-23

9:22 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்; மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்; அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.

9:23 ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.

Epistle

1 Corinthians 9:24-27

9:24 பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. இது உங்களுக்குத் தெரியாதா? எனவே, பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள்.

9:25 பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றிவாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.

9:26 நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.

9:27 பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்

Gospel

Matthew 20:1-16

20:1 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.

20:2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார்.

20:3 ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார்.

20:4 அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார்.

20:5 அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

20:6 ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

20:7 அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.

20:8 மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார்.

20:9 எனவே, ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர்.

20:10 அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால், அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள்.

20:11 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து,

20:12 ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள்.

20:13 அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா?

20:14 உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.

20:15 எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.

20:16 இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.