தவக்காலத்திற்கு முன் வரும் காலம்

எழுபதாம் நாளென்கின்ற ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

யோபு 9:1-12

9:1 யோபு அதற்கு உரைத்த பதில்:

9:2 உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்; ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?

9:3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

9:4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்; ஆற்றலில் வல்லவர்; அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்?

9:5 அவர் மலைகளை அகற்றுவார்; அவை அதை அறியா; அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்.

9:6 அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று; அதிரும் அதனுடைய தூண்கள்.

9:7 அவர் கட்டளையிடுவார்; கதிரவன் தோன்றான்; அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

9:8 தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

9:9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே.

9:10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

9:11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை; நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை.

9:12 இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்?

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 17:22-34

17:22 அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.

17:23 நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப்பார்த்துக் கொண்டு வந்தபோது “அறியாத தெய்வத்துக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கும் அந்த தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

17:24 “உலகையும், அதிலுள்ள அனைத்தையம் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.

17:25 அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே, மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை.

17:26 ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின் மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார்.

17:27 கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.

17:28 அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, “நாம் அவருடைய பிள்ளைகளே.”

17:29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனித கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது.

17:30 ஏனெனில், மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார்.

17:31 ஏனென்றால், ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானதென எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.”

17:32 “இறந்தவர் உயிர்த்தெழுதல்” என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், “இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்” என்றார்கள்.

17:33 அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார்.

17:34 சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர்.

நற்செய்தி

மத்தேயு நற்செய்தி (மத்தேயு) 25:14-30

25:14 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார்.

25:15 அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

25:16 ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.

25:17 அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார்.

25:18 ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

25:19 நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

25:20 ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.

25:21 அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

25:22 இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.

25:23 அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே, பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்’ என்றார்.

25:24 ஒரு தாலந்தைப் பெற்றுக் கொண்டவரும் அவரையணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.

25:25 உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

25:26 அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா?

25:27 அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார்.

25:28 ‘எனவே, அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள்.

25:29 ஏனெனில், உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்.

25:30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”