Førfaste

Septuagesima

Tekstrække 2

Bibeloversættelse

Den hellige Bibel på tamil

📜
Det Gamle Testamente

Jobs Bog 9,1-12

9:1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

9:2 ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.

9:3 அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9:4 நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.

9:5 அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.

9:6 கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9:7 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?

9:8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்.

9:9 இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

9:10 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்து போகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

9:11 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

9:12 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?

Epistel

Apostlenes Gerninger 17,22-34

17:22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.

17:23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

17:28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

17:29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

17:32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

17:33 இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான்.

17:34 சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.

Evangelium

Matthæusevangeliet 25,14-30

25:14 அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

25:15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

25:16 ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.

25:17 அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.

25:18 ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.

25:19 வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.

25:20 அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

25:21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

25:22 இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.

25:23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

25:24 ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

25:25 ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.

25:26 அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

25:27 அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,

25:28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.

25:29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.

25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.