4:1
அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.
4:2
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது;
4:3
“இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.
4:4
அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
4:5
வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
4:6
ஆனால், கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின.
4:7
மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை.
4:8
ஆனால், இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.
4:9
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
4:10
அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.
4:11
அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.
4:12
எனவே, அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டு கொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’” என்று கூறினார்.
4:13
மேலும், அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
4:14
விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்.
4:15
வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால், அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்.
4:16
பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.
4:17
ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்.
4:18
முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
4:19
இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
4:20
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.