தவக்காலத்திற்கு முன் வரும் காலம்

அறுபதாம் நாளென்கின்ற ஞாயிறு

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 45:5-12

45:5 நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.

45:6 கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

45:7 நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.

45:8 வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

45:9 தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், ‘நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்’ என்றும் அவன் வனைந்தது அவனிடம், ‘உனக்குக் கைத்திறனே இல்லை’ என்றும் கூறுவதுண்டோ?

45:10 தந்தையிடம், ‘நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்’ என்றும், தாயிடம், ‘நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்’ என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு!

45:11 இஸ்ரயேலின் தூயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: “நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?

45:12 நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.

திருமுகம்

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 1:18-25 அல்லது திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 தீமோத்தேயு) 3:10-17

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் (1 கொரிந்தியர்) 1:18-25

1:18 சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

1:19 ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.

1:20 இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?

1:21 கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்து கொள்ளமுடியும். ஆனால், உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. எனவே, மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

1:22 யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.

1:23 ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.

1:24 ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

1:25 ஏனெனில், மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 தீமோத்தேயு) 3:10-17

3:10 என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மனஉறுதி ஆகியவற்றைப் பின்பற்றிவந்திருக்கிறாய்.

3:11 அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

3:12 கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர்.

3:13 ஆனால், தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள்.

3:14 நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே.

3:15 நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது.

3:16 மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

3:17 இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

நற்செய்தி

மாற்கு நற்செய்தி (மாற்கு) 4:26-32

4:26 தொடர்ந்து இயேசு, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;

4:27 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.

4:28 முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.

4:29 பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

4:30 மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்?

4:31 அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது.

4:32 அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்” என்று கூறினார்.