கிறிஸ்து பிறப்புக் காலம்

கிறிஸ்து பிறப்புக்கால ஞாயிறு

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசாயா (ஏசாயா) 63:7-9

63:7 ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

63:8 ஏனெனில், “மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.

63:9 துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

திருமுகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (கலாத்தியர்) 4:4-7

4:4 ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு

4:5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

4:6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது.

4:7 ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

நற்செய்தி

லூக்கா நற்செய்தி (லூக்கா) 2:25-40

2:25 அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.

2:26 “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.

2:27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்க, பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.

2:28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

2:29 “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர்.

2:30-31 ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ளஉமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

2:32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

2:33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.

2:34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.

2:35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

2:36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;

2:37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.

2:38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

2:39 ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

2:40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.