திருப்பாடல்கள் (சங்கீதம்) 27:1-5 அல்லது எரேமியா 31:15-17
திருப்பாடல்கள் (சங்கீதம்) 27:1-5
27:1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
27:2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.
27:3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.
27:4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; § அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
27:5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார்.
எரேமியா 31:15-17
31:15 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது; ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்; ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்; ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை.
31:16 ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; நீ அழுகையை நிறுத்து; கண்ணீர் வடிக்காதே; ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள்.
31:17 உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.