திரித்துவ காலம்

திரித்துவ ஞாயிறு - மூவொரு கடவுள் பெருவிழா

உரைத்தொகுப்பு 1

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எண்ணிக்கை (எண்ணாகமம்) 21:4-9

21:4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர்.

21:5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

21:6 உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.

21:7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் பாவம் செய்துள்ளோம்” நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே, மோசே மக்களுக்காக மன்றாடினார்.

21:8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.

21:9 அவ்வாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

திருமுகம்

உரோமையருக்கு எழுதிய திருமுகம் (ரோமர்) 11:32-36

11:32 ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

11:33 கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை!

11:34 “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்?

11:35 தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?”

11:36 அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 3:1-15

3:1 பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.

3:2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார்.

3:3 இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

3:4 நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார்.

3:5 இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3:6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.

3:7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.

3:8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.

3:9 நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார்.

3:10 அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே!

3:11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3:12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்?”

3:13 “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

3:14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

3:15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.