6:44
என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
6:45
‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.
6:46
கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.
6:47
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
6:48
வாழ்வுதரும் உணவு நானே.
6:49
உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
6:50
உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
6:51
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”