தூய ஆவியின் காலம்

தூய ஆவிப் பெருவிழாவின் இரண்டாம் நாள்

உரைத்தொகுப்பு 2

வேதாகம மொழிபெயர்ப்பு

எக்யூமெனிக்கல் விவிலியம் — தமிழ் கத்தோலிக்க எக்யூமெனிக்கல் விவிலியம்

📜
பழைய ஏற்பாடு

எசேக்கியேல் 11:19-20

11:19 அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன்.

11:20 அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்; நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.

திருமுகம்

திருத்தூதர் பணிகள் (அப்போஸ்தலர்) 2:42-47

2:42 அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.

2:43 திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன.

2:44 நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.

2:45 நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.

2:46 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்.

2:47 அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

நற்செய்தி

யோவான் நற்செய்தி (யோவான்) 6:44-51

6:44 என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

6:45 ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.

6:46 கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.

6:47 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

6:48 வாழ்வுதரும் உணவு நானே.

6:49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.

6:50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

6:51 “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”